வியாழன், 17 மார்ச், 2016

சாதி வளர், காதல் கொல்.


செத்த  பிறகு வந்துவிடாது உயிர்
உயிரோடு இருப்பதால் வந்துவிடாது காதல்.
காதலோடு வாழ்பவர்களை
உயிரோடு வாழவிடுங்கள்.

காதலுக்காக பெற்றோரைத்
தள்ளிவைக்க முடியுமெனில்
காதல் பெரிதுதான்..

காதலித்ததற்காக  பிள்ளைகளுக்கு
கொள்ளிவைக்க முடியுமெனில்
 காதலைவிட சாதி  பெரிதுதான் ..

சாதி வளர...

ஸ்கேன்னில்
ஆணா பெண்ணா
அப்புறம் பார்க்கலாம்,
நிறத்தை பாருங்கள் .

கருப்பாய் இருந்தால்
களைக்க முடியுமா கேளுங்கள் .

முடிந்தவரை நிறைய குழந்தை
பெற்றுக்கொள்ளுங்கள்.

மறக்காமல் கேட்டுக்கொள்ளுங்கள்
டாக்டரும் நர்சும் என்ன சாதி என்று..


சாதி வளர
சாதியை  வளர்க்க

முன்னும் பின்னும் பெயருடன்
  சாதியைச் சேர்த்திடுங்கள் .

வீதியில்
வேறு சாதியில் - விளையாடினால்
சூடு வையுங்கள் .

நம்மை விட
உயர்ந்த / தாழ்ந்த
சாதிகள் இல்லையடி பாப்பா
என  பாரதி சொன்னதாகவே
சொல்லிவிடுங்கள்.

வசதி அதிகமோ குறைவோ
மற்ற சாதி திருமணதிற்கு
போகாதீர்கள் ...
அழைக்காதீர்கள்..

சாதி வளர
சாதியை  வளர்க்க


முட்டி மோதி
முன்னுக்கு வரப்பார்க்கும்
மட்ட ( மற்ற ) சாதிக்காரனை
முட்டியில்
தட்டி முடக்கிவிடுங்கள்.

இல்லையெனில்,
பதவியோ பணமோ
வந்துவிட்டால் ,
சாதியை மறந்து
விழா எடுக்கவேண்டி வரும்.

மனிதனை மிருகமும்
மிருகம் மனிதனையும்
புணரக்கூடாது ..
புத்தியில் நிறுத்துங்கள் .


மீறினால்

மெதுவாக
மிக மெதுவாக
கொன்றுவிடுங்கள் ..

நடுரோட்டில்
வெட்டி வெட்டி வீசாதீர்கள் ..

சாதி
அசுர வேகமாக
வளர வேண்டும்தான் ..
அசுரத்தனமாக அல்ல.

சாதி வளர்,
காதல் கொல்.

ஆனால்

மெதுவாக
மிக மெதுவாக...















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக