திங்கள், 14 மார்ச், 2016

காஸ் சிலிண்டெர்


காஸ் சிலிண்டருக்கு  ஒரு பெயர் சூட்டலாம் .

சிவப்பு ரோஜாவா சிவப்பு ராஜாவா
சிந்திக்கும் முன்னே சின்னதாய் கேள்வி .
சிலிண்டர் என தெரிந்தும் ஏனோ
சிநேகிதமாய் கேட்கிறேன் - நீ
ஆணா ? பெண்ணா ?

சிலருக்கு தெரிந்திருக்கும் பலருக்கு புரிந்திருக்கும்
சில்லின்றி ( விறகு) நீ செய்யும் வேள்வி .
சின்னதாய் உனக்கு ஒரு பேர் வைக்க வேண்டும்
சிறிதுநேரம் சிரித்திரு செல்லச் சிலிண்டரே .

கர்பத்திலிருந்து காற்றைப் பிரசவித்து
வெப்பத்தை வெளிக்கொனர்வதால் நீ பெண் .
நிரம்பியிருக்கையில் விரும்பப்பட்டு - காலியானதும்
நிராகரிக்கப்படுவதை நினைத்தால் ஆண் .
எதற்கிந்த பட்டிமன்றம் ?
பேர் வைக்க பாலினம் வேண்டாமா .

ஆணால் பெண்தான்
ஆண் பெண் செய்கிறாள் .
ஆனால் பெண்தான் - உன்னை
ஆன் செய்கிறாள் .

உரசிய சிறு நெருப்பூட்டி
 உன்னை வளர்க்கிறாள் ,
உணவைச் சமைக்கிறாள் .
ஆனாலும் தெரியவில்லை - நீ
ஆணா ? பெண்ணா ?

'ஒற்றைத் தீக்குச்சி போதும் ஒளிர'
'தீப்பொறி இருந்தால் திறன் வெளிப்படும்'
ஓரத்தில் அமர்ந்து
ஓசையின்றி நீ சொல்லும்
தன்னம்பிக்கை வரிகள் இவை .

தொண்டைவரை தின்று
தொப்பென மெத்தையில் விழுந்து
தொப்பைக்கு காத்து வாங்கும்போது கூட
தோன்றவில்லை உன் நினைவு .

வேலை நாட்களில்
நாக்கில் உணவை வைத்து ,
விடுமுறையில்
உணவில் நாக்கை வைத்து
எங்களையே மறக்கின்றோம்
சுவைத்து சுவைத்து ...
உன்னை எப்படி நினைத்து .

விருந்தாளி வரும்போது
வெறுமனாகி வெறுபேற்றி
பழகாத பக்கத்துக்கு வீட்டுக்காரரிடம்
பல்லிளிக்க செய்திடுவாய் .

பைபாசில் பைக் ஓட்டும்
பழகாத பையனைப் போல்
பற்றவைத்து அணைக்கும் வரை
பதற்றத்துடன் வைத்திருப்பாய்.


நீ மூச்சு விட்டபின் தான்
குக்கருக்கு மூச்சு வரும்  - சோறு
குடலுக்கு போய்ச் சேரும் .

தீயாகி செத்திடுவாய்.
செத்து தீயாவோம் .

புதிய உடல் ; பழைய உயிர் -
மனிதன்..
பழைய உடல் ; புதிய உயிர் -
நீ சிகப்பு மனிதன்.

ஆக்குபவனாகவும்
அழிப்பவனாகவும்
அமைதியானலிங்கம் ...

சிவா .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக