வெள்ளி, 6 மே, 2016

பற்றட்டு இரு.




என் சீட்டின்
முன் நின்ற
பெண் ...

அழகின் ஆணவம்
அழகியின் ஆபரணம் ..
திரும்பிப் பார்க்காத திமிர்
திருத்தம் தேவையில்லா தமிழ்...

என் கண்களின்
இமைகள் உறைந்தன...
ஆனால்
காட்சிகள் மறைத்தன...

பேருந்து பயணம்தான் ..
ஆனால்
பறந்துகொண்டிருந்தேன் .

நிறுத்தம் வந்தது ..
நின்றவள் இறங்கினாள் .

அது
குடிசைகள்
நிறைந்த பகுதி.

பற்றிக்கொண்டது,
பற்றிக்கொண்டு வந்தது.

பற்றட்டு இரு,
பழமொழி புன்னகைக்க .

பேருந்து
புறப்பட்டு விட்டது.








வியாழன், 5 மே, 2016

குடியாட்சி

குடியாட்சி



சொல்லாத உண்மை ஒன்றை
நண்பனிடம் சொல்லவேண்டும் ..

இல்லாத காதலையும்
இருப்பது போல் பேச வேண்டும் ..

தொண்டையையும் தாண்டி
விஷம் செல்லட்டும் ..
கண்கள்  மேலே
சொருகி இருக்கட்டும் ..
கோபம் கொப்பளிக்கட்டும் ..
கொண்டாட்டம்
கூட்டம் கூட்டட்டும் ...

பேசி சிரிக்கட்டும் வாய்கள் ..
ஆடி களைக்கட்டும் கால்கள் ..

நானும்
சிலநேரம்
சிவனாக ...

நானும்
சிலநேரம்
சிவனே என்று ....

பூரண மது விலக்காம்,
புண்ணாக்கு.


















திங்கள், 21 மார்ச், 2016

டாட்டா


எடுத்துக்கோ னா
கையில ஒண்ணுமில்ல.

புடிச்சுக்கோ னா
பந்து எதுவும் போடல.

சிமிட்டி சிமிட்டி
பேசுனா  கண்ண ..

எட்டி எட்டி
போய் நான் நின்னேன்.

சினிமாவும்
சீனியர் ப்ரன்ட்ஷிப்பும்
சொல்லிகொடுத்திருந்தது ..

காதல்ல தோல்வின்னா
தண்ணிமட்டும் போடலாம்னு ..

வேண்டாம்னு முடிவுசெஞ்சேன்,
நைட் எல்லாம் யோசிச்சிட்டு.

விரல்ல மெட்டியும்
வீட்ல சுட்டியும்
சுட்டிக்  காட்டி,
விளக்கமா சொன்னேன் ...
அன்பா  திட்டி.

திரும்பிட்டா
திருந்திட்டா !

டாட்டா .



மூன் லிமிரிக்

 LIMERICK

இரவெல்லாம் உடனிருந்த நிலா
தூரமாய் வருகிறாய் உலா
குறைந்தாய் வளர்ந்தாய்
சோறூட்ட துணைபுரிந்தாய்
உன்னை  பார்த்தே வலிக்குது விலா .

வியாழன், 17 மார்ச், 2016

சாதி வளர், காதல் கொல்.


செத்த  பிறகு வந்துவிடாது உயிர்
உயிரோடு இருப்பதால் வந்துவிடாது காதல்.
காதலோடு வாழ்பவர்களை
உயிரோடு வாழவிடுங்கள்.

காதலுக்காக பெற்றோரைத்
தள்ளிவைக்க முடியுமெனில்
காதல் பெரிதுதான்..

காதலித்ததற்காக  பிள்ளைகளுக்கு
கொள்ளிவைக்க முடியுமெனில்
 காதலைவிட சாதி  பெரிதுதான் ..

சாதி வளர...

ஸ்கேன்னில்
ஆணா பெண்ணா
அப்புறம் பார்க்கலாம்,
நிறத்தை பாருங்கள் .

கருப்பாய் இருந்தால்
களைக்க முடியுமா கேளுங்கள் .

முடிந்தவரை நிறைய குழந்தை
பெற்றுக்கொள்ளுங்கள்.

மறக்காமல் கேட்டுக்கொள்ளுங்கள்
டாக்டரும் நர்சும் என்ன சாதி என்று..


சாதி வளர
சாதியை  வளர்க்க

முன்னும் பின்னும் பெயருடன்
  சாதியைச் சேர்த்திடுங்கள் .

வீதியில்
வேறு சாதியில் - விளையாடினால்
சூடு வையுங்கள் .

நம்மை விட
உயர்ந்த / தாழ்ந்த
சாதிகள் இல்லையடி பாப்பா
என  பாரதி சொன்னதாகவே
சொல்லிவிடுங்கள்.

வசதி அதிகமோ குறைவோ
மற்ற சாதி திருமணதிற்கு
போகாதீர்கள் ...
அழைக்காதீர்கள்..

சாதி வளர
சாதியை  வளர்க்க


முட்டி மோதி
முன்னுக்கு வரப்பார்க்கும்
மட்ட ( மற்ற ) சாதிக்காரனை
முட்டியில்
தட்டி முடக்கிவிடுங்கள்.

இல்லையெனில்,
பதவியோ பணமோ
வந்துவிட்டால் ,
சாதியை மறந்து
விழா எடுக்கவேண்டி வரும்.

மனிதனை மிருகமும்
மிருகம் மனிதனையும்
புணரக்கூடாது ..
புத்தியில் நிறுத்துங்கள் .


மீறினால்

மெதுவாக
மிக மெதுவாக
கொன்றுவிடுங்கள் ..

நடுரோட்டில்
வெட்டி வெட்டி வீசாதீர்கள் ..

சாதி
அசுர வேகமாக
வளர வேண்டும்தான் ..
அசுரத்தனமாக அல்ல.

சாதி வளர்,
காதல் கொல்.

ஆனால்

மெதுவாக
மிக மெதுவாக...















திங்கள், 14 மார்ச், 2016

காஸ் சிலிண்டெர்


காஸ் சிலிண்டருக்கு  ஒரு பெயர் சூட்டலாம் .

சிவப்பு ரோஜாவா சிவப்பு ராஜாவா
சிந்திக்கும் முன்னே சின்னதாய் கேள்வி .
சிலிண்டர் என தெரிந்தும் ஏனோ
சிநேகிதமாய் கேட்கிறேன் - நீ
ஆணா ? பெண்ணா ?

சிலருக்கு தெரிந்திருக்கும் பலருக்கு புரிந்திருக்கும்
சில்லின்றி ( விறகு) நீ செய்யும் வேள்வி .
சின்னதாய் உனக்கு ஒரு பேர் வைக்க வேண்டும்
சிறிதுநேரம் சிரித்திரு செல்லச் சிலிண்டரே .

கர்பத்திலிருந்து காற்றைப் பிரசவித்து
வெப்பத்தை வெளிக்கொனர்வதால் நீ பெண் .
நிரம்பியிருக்கையில் விரும்பப்பட்டு - காலியானதும்
நிராகரிக்கப்படுவதை நினைத்தால் ஆண் .
எதற்கிந்த பட்டிமன்றம் ?
பேர் வைக்க பாலினம் வேண்டாமா .

ஆணால் பெண்தான்
ஆண் பெண் செய்கிறாள் .
ஆனால் பெண்தான் - உன்னை
ஆன் செய்கிறாள் .

உரசிய சிறு நெருப்பூட்டி
 உன்னை வளர்க்கிறாள் ,
உணவைச் சமைக்கிறாள் .
ஆனாலும் தெரியவில்லை - நீ
ஆணா ? பெண்ணா ?

'ஒற்றைத் தீக்குச்சி போதும் ஒளிர'
'தீப்பொறி இருந்தால் திறன் வெளிப்படும்'
ஓரத்தில் அமர்ந்து
ஓசையின்றி நீ சொல்லும்
தன்னம்பிக்கை வரிகள் இவை .

தொண்டைவரை தின்று
தொப்பென மெத்தையில் விழுந்து
தொப்பைக்கு காத்து வாங்கும்போது கூட
தோன்றவில்லை உன் நினைவு .

வேலை நாட்களில்
நாக்கில் உணவை வைத்து ,
விடுமுறையில்
உணவில் நாக்கை வைத்து
எங்களையே மறக்கின்றோம்
சுவைத்து சுவைத்து ...
உன்னை எப்படி நினைத்து .

விருந்தாளி வரும்போது
வெறுமனாகி வெறுபேற்றி
பழகாத பக்கத்துக்கு வீட்டுக்காரரிடம்
பல்லிளிக்க செய்திடுவாய் .

பைபாசில் பைக் ஓட்டும்
பழகாத பையனைப் போல்
பற்றவைத்து அணைக்கும் வரை
பதற்றத்துடன் வைத்திருப்பாய்.


நீ மூச்சு விட்டபின் தான்
குக்கருக்கு மூச்சு வரும்  - சோறு
குடலுக்கு போய்ச் சேரும் .

தீயாகி செத்திடுவாய்.
செத்து தீயாவோம் .

புதிய உடல் ; பழைய உயிர் -
மனிதன்..
பழைய உடல் ; புதிய உயிர் -
நீ சிகப்பு மனிதன்.

ஆக்குபவனாகவும்
அழிப்பவனாகவும்
அமைதியானலிங்கம் ...

சிவா .




ஞாயிறு, 13 மார்ச், 2016

கடன் சுமை

     


            இளம் பெண்களை
                இல்லத்தில் கொண்ட
                    பெற்றோர்களுக்கு
               கடன் இருப்பதைவிட
                        அப்பெண்கள்
                             உடன் இருப்பதே
                                அதிகச் சுமை - இன்னும்கூட .