ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

கோட்டை கட்டு



நல்லவனுக்கு நாளை மரணம் .
கெட்டவன் உயிர்புகும் தருணம் .

சீக்ரெட்டாய் உன்னை
சீக்கிரமாய் அணைக்க நினைத்தவன்
சிகரெட்டாய்  அணைப்பான்.

குடித்தனம் உன்னோடு இல்லை,
குடி தினம் உண்டு .

கலைந்தது கனவு - இனி
களைத்திருக்கும் அவன்  கண்கள் ,
கலைந்தே இருக்கும் தலை.

தடவி தடவி திரிந்தான்
தடவமுடியாமல்
தடம்மாறி போனதால்...

கிறுக்கினான்
கிறுக்கனாய்.

கெட்டவன் சட்டென முடிய
நல்லவன் நாளை பிறக்கிறான் ...

 சிவப்பிற்கு சிரிப்பிற்கு
 மட்டுமல்ல ,
சிறப்பிற்கும் சிநேகிதன்.



கல்யாண வேலை





விவாகம் இங்கே 
விவாத பொருள் .
விவேகம் வேகத்தில் 
வீரியமில்லை..

கண்ணுக்கு எட்டியவரை 
காதல் இருந்தும் 
கைக்கு கிட்டவில்லை   
கல்யாணம் கூடவில்லை.

சந்தித்த பெண்களெல்லாம்
சிந்தனையில் நிற்கவில்லை .
நினைவுக்கு தெரிந்து 
நேற்றுவரை 
நெருங்கின சொந்தத்தில் 
பெண்ணில்லை .

விதவையோ 
வேசியோ 
வேறு ஜாதியிலோ - பெண்ணெடுக்க 
வீரமும் இல்லை.

வேலை வேலை - அதற்கான 
நேரமும்  இல்லை.



  



சனி, 20 பிப்ரவரி, 2016

கேள்WE


         

சுக பிரசவமா ? சிஷேரியனா ?
பையனா ? புள்ளையா ?
பேரென்ன ?

எந்த ஸ்கூல்?
10th 12th ல என்ன மார்க் ?
கோர்ஸ் , காலேஜ் , பீஸ் ???

எங்க வேலை ? சம்பளம் ?
லவ்வு கிவ்வு ?

கல்யாணம் ஆச்சா ?
எதாச்சும் விஷேசமா ?

                                    ( சுக பிரசவமா ? )

இடம் வாங்கி போட்டிருக்கியா ?
வீடு கீது ?

சுகர் இருக்கா ? PP .

எந்த ஹாஸ்பிடல்?
இன்சூரன்ஸ் ?

எப்போ எடுக்கறாங்க ?
அப்பவே கருமாதியா ?

கேள்விகளாக
வாழ்க்கை ,
பதிலாகவும்.






   

எங்க போனாலும்




பாலைவனப்   பயணம்,
தூரத்தில் தண்ணீர்.
துரத்தி தொடர
தூரத்திலேயே
தெரிகிறது,

கானல் நீரின்
கண்ணாமூச்சி விளையாட்டு.

நடக்க நடக்க
நேரம் கடக்கிறது .
தூரம் கடந்தபாடில்லை ..

தாகம் தாக்குகிறது .

வியர்வையின் ஈரத்தால்
உதட்டில்
உப்புச்சுவை.

 கண்ணில்
 கண்ணீரில்லை .

வாயில்
பேச்சு வந்தது ;
எச்சில் வரவில்லை.

வேறு வழியில்லை,
ஜிப்பை திறந்து
தன்னீரை   ( சிறுநீர்)
குடிக்கும்போது .....

 அதிர்ச்சியும்
ஆச்சரியமும் .

Bear  Grylls தொடர்ந்தார்.....
Discovery ல் ,
Man vs wild .



அப்பத்தான்
தோனுச்சு !

எங்க போனாலும்
தண்ணி கொண்டு 
போகணும் .





உனக்கு எப்படி புரியும் என் காதல்





நீ கண் சிமிட்டும்
நேரம் போதும்
காதல் வர ..
கன நேரம்தான்
பற்றிக்கொள்ள ..


நீ வந்தபின்தான்
என்னால் கவிதை
எழுத முடிந்தது.


நீ கண் மூடினாலே
என் உலகம் இருண்டது ..
இருந்தபோது
இன்னும் வெளிச்சமாய்
இருந்தது.

நீ ஏன்
வெள்ளையாய் இருக்கிறாய்.
நான் மட்டும் கருப்பாய் ?

நீ  நான்
படிக்கும்போதே  தேவைப்பட்டாய்.
தூங்கும்போதெல்லாம்
யாராலோ அணைக்கப்பட்டாய்.


  நீ என்
 காதலை புரிந்துகொள்ள
     முடியாத
     TUBE LIGHT .






விலகியும் விளங்காமலும்





           சிரித்துச் செல்கையில்
           சிறைபட்டது தெரியவில்லை.
           விலகிச் சென்றபின்
            விலங்கிருந்தது கையில்,
            விளங்காமல் நான்.

            புல்லில் பனித்துளியாய்
            புன்னகைத்து சென்றவள்.
            விரல் நடுவில் சொருகிவிட்டாள்
            விவாக பத்திரிக்கை - மீண்டும்
            விளங்காமல் நான்..

             நிலத்தில் நின்றுகொண்டு
             நிலாவை பார்த்திருந்தேன்.
             பயணத்தில் உடன்வர ,
             பக்கத்தில் வருமென - இன்னும்
              விளங்காமல் நான்..

               அப்பா !
               அடிக்கடி  அடிக்கு அடி
               நீங்க சொல்லுவீ ங்களே  ...
             '' நீ விளங்காமல் போவாய்'' னு - அதுதானா ?
                விளங்காமல் நான்.

         

     

மூன்றெழுத்தில்





   கோதுமை நிற
            மங்கையே !
                தினையில்
   கோர்த்த தேனே !
           மயக்கும் விழி
              திறந்து - தீரனை
   கோழையாக்கும்
           மன்மத
              திலகமே ..
   கோடையிலே அன்பு
           மழையில்
              தினமும் நனைத்தவளே !
  கோழிகறியோ
          மட்டனோ - சுவையுடன்
             திண்ண சமைத்தவளே  !
   கோபப்படுவாய்
           மன்னிப்பாய்
              திரும்பப் பேசுவாய் ...
   கோர முகத்துடன்
           மவுனமாவாய்
               திருந்தி சிரிப்பாய் ...
    கோபம் குறை .
            மவுனம் களை .
               திருந்த நீ மறுத்தால்
      கோப்பையில்
              மதுவுடன்
                திரிவேன் .
      கோபியரின்
             மடியினில்
                திணிவேன் -
       கோர
               மரணம் வேண்டி
                   தினம் தொழுவேன் ..
        கோபம்
               மறந்து    - நீ
                   திரும்பும் வரை - மூச்சிருக்கும் !!!  
                       கோ
                                ம
                                     தி .
   
 
   
 
 
  

வியாழன், 18 பிப்ரவரி, 2016

வரவேற்பு



விமர்சனமில்லா பார்வை வேண்டி
வரம் கேட்டபடி உள் நுழைய,
நகை பட்டொடு
நகைத்திருந்த பெண்கள்.
வெள்ளை உடையில்
சுமங்கலியாய் ஆண்கள்.
குழைந்தையின் பசி பேசும்
அழகை இழக்காத இளம்தாய்கள்.
சுருக்கம் விழுந்த பாட்டி மடியில்
சிரித்து விழும் பேத்திகள்.
மணமக்கள் முகத்தில்
வெட்கத்தை தேடி ரசித்தப்படி நான்.
என் மகள் காதில் மெதுவாக
'பொண்ணு அழகா இருக்கு' என்றாள் .
நான் சொல்ல அங்கில்லை ஒரு காது!
கல்யாணம் எப்போதும் அழகே....




புதன், 17 பிப்ரவரி, 2016

ஒன்றும் இரண்டும்



                                                 



                                                       உண்மையும் பொய்யும் 
 
                                              இரட்டைக்  குழந்தைகள் ,

                                      நன்மையையும் தீமையும் 

                                             ஒரே திசைகள்,

                                     ஆதியும் அனாதியும்

                                            ஒன்றென கொண்டால் ...

                                      ஆணும் பெண்ணும்

                                               அடங்கின ஒன்றுள் .